அம்பை அருகே பட்டப்பகலில் ஊருக்குள் நுழைந்து ஆட்டை கடித்த சிறுத்தையால் பரபரப்பு பொதுமக்கள் அச்சம்
ம்பை அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து ஆட்டை கடித்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அம்பை,
அம்பை அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து ஆட்டை கடித்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊருக்குள் புகுந்த சிறுத்தை
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ளது மணிமுத்தாறு கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழிலே உள்ளதால் பலர் ஆடு, மாடு வளர்ப்பதோடு விவசாயமும் செய்து வருகின்றனர். மேலும் மலையடிவார பகுதியாக உள்ளதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வீட்டு விலங்குகளான ஆடு, நாய் போன்றவற்றை கடித்து செல்வதுண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மணிமுத்தாறை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து உள்ளது. இதைப்பார்த்ததும் அவர் தனது கையில் இருந்த அரிவாளுடன் சத்தமிட்டுக் கொண்டே சென்றதை அடுத்து சிறுத்தை பயந்து ஆட்டை விட்டுச் சென்றுவிட்டது.
பொதுமக்கள் அச்சம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தையின் கால்தடங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் உள்ளவர்களை இரவில் விளக்குகளை எரியவிட்டு விழிப்புடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி சென்றுள்ளனர்.
ஆனால் சிறுத்தை அதே பகுதியில் உள்ள பொத்தையில் பதுங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பகல் நேரத்திலேயே சிறுத்தைகள் வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனத்துறை சார்பில் 2 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பகலில் ஊருக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.