தமிழ் கவிஞர்கள் தினத்தையொட்டி ஒக்கூர் மாசாத்தியார் நினைவிடத்தில் கலெக்டர் மரியாதை
தமிழ் கவிஞர்கள் தினத்தையொட்டி சங்ககால புலவர் ஒக்கூர் மாசாத்தியார் நினைவிடத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை,
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி, அன்றைய தினத்தை தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் கவிஞர்கள் தினமாக கொண்டாடி வருகிறது. அதன்படி நேற்று சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் உள்ள சங்ககால புலவர் மாசாத்தியார் நினைவு மண்டபத்தில் தமிழ் கவிஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி, ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- நாம் அனைவரும் இந்த வீரபூமியில் வாழ்ந்த ஒவ்வொரு சங்ககால புலவர்களையும் நினைக்க வேண்டும். வருங்கால சந்ததியினர் அவர்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் இதுபோன்ற அரசு விழாக்கள் நடைபெற்று வருகிறது.
பொதுவாக, இந்த காலத்தில் உள்ள மாணவர்களுக்கு சங்க இலக்கியங்கள் நன்கு தெரிய வேண்டும். அதிலும் குறிப்பாக திருக்குறள் படித்தாலே போதும் அதில் உள்ள கருத்துகள் வேறு எந்த மொழி புத்தகங்களிலும் கிடையாது.
அனைத்து இலக்கிய சொற்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் திருக்குறள் உள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக தினமும் புத்தகங்களை படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் நீங்கள் ஒவ்வொருவரும் தமிழ் அறிஞர்களாக உருவாக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன், சிவகங்கை தாசில்தார் மைலாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், துணை தாசில்தார் மேரி, ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா, ஊராட்சி பிரதிநிதிகள் கிருஷ்ணன், சோமன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.