நடமாடும் அங்காடியில் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் வாங்கிய பொதுமக்கள்

நாகர்கோவிலில் நடமாடும் மீன் அங்காடியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் வாங்கி சென்றனர்.

Update: 2020-04-30 00:22 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவிலில் நடமாடும் மீன் அங்காடியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மீன் வாங்கி சென்றனர்.

நடமாடும் மீன் அங்காடி

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வசதியாக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை தற்காலிக காய்கறி சந்தையாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றி அமைத்து உள்ளது.

அங்கு மாவட்ட மீன்வளத்துறை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நடமாடும் மீன் அங்காடி மூலம் மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் இறால் மற்றும் சாளை ஆகிய மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன.

சமூக இடைவெளி

இந்த நிலையில் நேற்று முதல் நடமாடும் மீன் அங்காடியில் இறால், சாளை மீன்கள் தவிர அயிலை, வில மீன் மற்றும் நண்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் மீன் விற்பனை செய்யப்படும் விலை பட்டியலும் அங்கு இருந்தது. மீன்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

இறால் ரூ.350, அயிலை ரூ.350, வில மீன் ரூ.550, சாளை மீன் ரூ.250, நண்டு ரூ.350 ஆகும். மீன்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி மீன்களை வாங்கி சென்றனர். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு அவ்வப்போது அறிவுரை கூறினர்.

தற்போது பொதுமக்கள் மீன்கள் வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்