கொரோனாவால் பாதிக்கப்பட்ட 128-ல் 85 பேர் வீடு திரும்பினர்: டெல்டா மாவட்டங்கள் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகருமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 128 பேரில் 85 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Update: 2020-04-29 23:00 GMT
தஞ்சாவூர், 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 128 பேரில் 85 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும் கொரோனா தொற்று ஏற்படாததால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி டெல்டா மாவட்டங்கள் நகருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு இருந்தால் அந்த மாவட்டங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்களாக மத்திய அரசு வகைப்படுத்துகிறது. அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் 15-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 55 பேரும், நாகை மாவட்டத்தில் 44 பேரும், திரூவாரூர் மாவட்டத்தில் 29 பேரும் என மொத்தம் 128 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிவப்பு மண்டலம்

இதன் மூலம் 3 மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்துக்குள் வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

நாளடைவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் டெல்லி சென்று வந்தவர்களிடம் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

85 பேர் வீடு திரும்பினர்

இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் தெரிந்தவுடன் அவர்கள் வசித்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் 55 பேரில் நேற்று வரை 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்னும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் 29 பேரில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாகை மாவட்டத்தில் 44 பேரில் 34 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 10 பேரில் 8 பேர் திருவாரூர் மருத்துவமனையிலும், 2 பேர் வெளி மாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 மாவட்டங்களிலும் 85 பேர் வீடு திரும்பினர். தற்போது 43 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

14 நாட்கள்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. நாகை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

ஒரு மாவட்டத்தில் 14 நாட்கள் தொடர்ச்சியாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக அந்த மாவட்டம் மாறும். அதன்படி டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 முதல் 8 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

ஆரஞ்சு மண்டலமாக மாறுமா?

மேலும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கிருமிநாசினியும் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்டா மாவட்டம் சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்தை நோக்கி நகருமா? என்ற எதிர்பார்ப்பு டெல்டா மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்