கும்பகோணம் அருகே போலீஸ்காரர்-டீ வியாபாரி சண்டையிடும் ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவுவதால் பரபரப்பு
கும்பகோணம் அருகே போலீஸ்காரரும், டீ வியாபாரியும் சண்டையிடும் ‘வீடியோ’ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பனந்தாள்,
கும்பகோணம் அருகே போலீஸ்காரரும், டீ வியாபாரியும் சண்டையிடும் ‘வீடியோ’ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலையில் சண்டை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் தீபக். ஊரடங்கையொட்டி இவர் சம்பவத்தன்று திருப்பனந்தாள் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு நந்தவர்மன் என்பவர் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டு இருந்தார். அவரிடம் தீபக், டீ விற்கக்கூடாது என கூறி உள்ளார்
இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருவரும் சாலையில் நின்றபடி ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து தாக்கி கொண்டனர். அப்போது கீழே கிடந்த உருட்டு கட்டையால் தீபக், நந்தவர்மனை தாக்கினார். அந்த கட்டையை பிடுங்கி நந்தவர்மனும் போலீஸ்காரரை தாக்கினார்.
வேகமாக பரவும் ‘வீடியோ’
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீசார் அங்கு விரைந்து சென்று போலீஸ்காரரையும், டீ வியாபாரியையும் சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
சாலையில் போலீஸ்காரர் ஒருவர், டீ வியாபாரியுடன் சண்டையிட்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சண்டை தொடர்பான ‘வீடியோ’ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.