கடையம் அருகே, அட்டகாசம் செய்த கரடி சிக்கியது - வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
கடையம் அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி, வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது.
கடையம்,
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவசைலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடிகள் கூட்டம் நுழைந்து பழ மரங்கள், வாழைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கரடிகளை உடனே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், கள இயக்குனர் கயாரத் மோகன் தாஸ் உத்தரவின் பேரில், அம்பை துணை இயக்குனர் (பொறுப்பு) கணேஷ் அறிவுறுத்தலின்படி, கரடிகளை பிடிக்க கடையம் அருகே உள்ள பங்களாக்குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த கூண்டில் 12 வயது ஆண் கரடி சிக்கியது. அந்த கரடியை வன கால்நடை மருத்துவர் மனோகரன், கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் முத்துக்கிருஷ்ணன், சிவமுத்து, கால்நடை மருத்துவ ஆய்வாளர் அர்னால்ட் ஆகியோர் சோதனை செய்தனர்.
இதையடுத்து பிடிபட்ட கரடியை துணை இயக்குநர் (பொறுப்பு) கணேஷ் தலைமையில், கடையம் வனச்சரகர் நெல்லைநாயகம், முண்டந்துறை வனச்சரகர் சரவணகுமார், வனவர் முருகசாமி ஆகியோர் முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடமாடி வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர். மேலும் அந்தப்பகுதியில் சுற்றி திரியும் மற்ற கரடிகளை பிடிக்க சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.