வெளிநாடுகளில் வசிக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வர நடவடிக்கை நாராயணசாமி உறுதி

வெளிநாடுகளில் வசிக்கும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக அழைத்து வர உரிய நடவடிக்கை எடுப்போம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்தார்.

Update: 2020-04-29 05:28 GMT
புதுச்சேரி,

பேரிடர் மேலாண்மை துறையின் கூட்டம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுவை தலைமை செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரிடர் மேலாண்மை துறை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுத்து உள்ளோம். குறிப்பாக நம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் வெளிமாநிலத்தில் இருந்து வந்து எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். விதிமுறைகள் இருந்தாலும் மனிதாபிமானம் அடிப்படையில் அவர்களை அதிகாரிகள் எல்லைக்குள் நுழைய அனுமதித்து இருக்கலாம். அவர்களை தடுத்து நிறுத்தியது கடுமையான செயல். உத்தரவுப்படி அவர்கள் அதை செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி எல்லைக்குள் நுழைய அனுமதிக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

மத்திய அரசுக்கு கடிதம்

இதே போல் பல மாநிலங்களில் நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். குறிப்பாக நமது மாநில மாணவிகள் சிலர் மத்திய பிரதேசத்திலும், ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் 22 முதியவர்கள் வாரணாசியிலும் தங்கி சிக்கி உள்ளனர். அவர்கள் எல்லோரும் பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்பட்டால் அந்த மாநில முதல்-அமைச்சர்களுடன் பேச உள்ளேன்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். அதேபோல் வெளிநாடுகளில் உள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை பதிவு செய்து பத்திரமாக அழைத்து வர உரிய நடவடிக்கை எடுப்போம். வருகிற 3-ந் தேதிக்கு பின் இந்த பிரச்சினையில் முடிவெடுப்போம்.

தற்காலிக ஜெயில் இடம் மாற்றம்

இந்த காலகட்டத்தில் குற்றம் செய்து கைதானவர்களை ஜெயிலுக்கு அனுப்ப கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களை தனியாக ஓர் இடத்தில் வைத்து பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் கதிர்காமம் அரசு பள்ளிக் கூடத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சிறையாக மாற்றி உள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே அந்த இடத்தில் தற்காலிக ஜெயிலை வைக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த கால முடிவுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் கோரிக்கையை ஏற்று தற்காலிக ஜெயிலுக்கு வேறு இடத்தை தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்