பெரம்பலூரில் நடக்க முடியாமல் வந்த கர்ப்பிணிக்கு உதவிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ
பெரம்பலூரில் நடக்க முடியாமல் வந்த கர்ப்பிணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் நடக்க முடியாமல் வந்த கர்ப்பிணிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதவிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோ
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இருந்து போலீசார் சரியான ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கினால் உணவு இல்லாமல் தவிக்கும் ஆதரவற்றோருக்கு போலீசார் உணவு வழங்கியும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வழங்கியும் வருகின்றனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போது கிடைக்கின்ற உணவை, போலீசார் அதே இடத்தில் வைத்து சாப்பிட்டு விட்டு, தனது பணியை தொடர்கின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களான முகநூல், வாட்ஸ்-அப், டிக்-டாக் உள்ளிட்டவைகளில் வெயிலில் நடக்க முடியாமல் வந்த நிறைமாத கர்ப்பிணியை கண்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், அவரிடம் வீடு எங்குள்ளது என விசாரித்து, தனது ஜீப் மூலமே அந்த பெண்ணை அவரது வீட்டிற்கு கொண்டு விட்டு வருவதற்கு உதவி செய்த வீடியோ நேற்று முன்தினம் இரவு வைரலானது.
பாராட்டு
அந்த வீடியோ குறித்து விசாரித்ததில், பெரம்பலூரில் பதிவானது என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 8 கிலோ மீட்டர் பகுதிவரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் ஊர்க்காவல் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மதியம் உச்சி வெயிலில் நடக்க முடியாமல் நிறைமாத கர்ப்பிணியான சங்குபேட்டையை சேர்ந்த சங்கர் மனைவி தனம் என்பவர் நடந்து வந்தார்.
இதையடுத்து உடனடியாக இன்ஸ்பெக்டர், தனது ஜீப்பில் அந்த பெண்ணை ஊர்க்காவல் படையினர் உதவியுடன் ஏற்றி, அவரது வீட்டில் கொண்டு விட்டு வருமாறு டிரைவரிடம் கூறினார். டிரைவரும் அந்த பெண்ணை பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு விட்டு வந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளை குவித்து வருகிறது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த மனிதாபிமான செயலை, சக போலீசாரும் மட்டுமின்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.