“ஆரோக்கிய சேது” செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகோள்

“ஆரோக்கிய சேது” செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-29 02:27 GMT
நெல்லை, 

“ஆரோக்கிய சேது” செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“ஆரோக்கிய சேது” செயலி

கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சமூக விலகலை நாம் ஒழுங்காக கடைபிடிக்கிறோமா? என்பதை கண்காணிக்கும் “ஆரோக்கிய சேது” என்ற செயலியானது தொடர்பு தடமறிதல் என்ற தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. இது கொரோனா பாதிப்படைந்த பகுதியில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தேசிய தகவலியல் மையம் தயாரித்துள்ள இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களை நோயிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். இதை “கூகுள் பிளே ஸ்டோர்” அல்லது “ஆப்பிள் ஸ்டோரில்” இருந்து தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து, பெயர், பாலினம், வயது, சமீபத்தில் வெளிநாடு சென்று வந்த தகவல்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் செயலியின் கேள்விகளுக்கு நாம் கொடுக்கும் உண்மையான பதில்களை வைத்து நம் உடல் நிலையை தெரிவிக்கும். நோய் பாதிப்பின் அளவை கொண்டு பச்சை அல்லது மஞ்சள் நிறக் கோடுகள் வரும். பச்சை நிறமுடையவர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகளையும், மஞ்சள் நிறமுடைய உபயோகிப்பாளருக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முறையான மருத்துவத்தை தொடங்கவும் இந்த செயலி அறிவுறுத்தும்.

புகார் தெரிவிக்கலாம்

வருமுன் காப்போம் என்ற கொள்கைப்படி இந்த செயலியை பயன்படுத்தும் 2 நபர்கள் அருகருகே வரும் நிலையில், 2 பேரின் தகவல்களையும் எடுத்துக் கொள்ளும். இந்த செயலி பின்னாளில் இதில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டால் இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கும். இதன்மூலம் நோய் வரும்முன் நம்மை நாமே காத்துக் கொள்ளலாம். இது இந்த செயலியின் சிறப்பு அம்சமாகும்.

வரும் காலத்தில் வெளியூர் செல்ல டிக்கெட் எடுக்கும்போது இதில் உள்ள ஈ-பாஸ் என்ற அனுமதிச் சீட்டு மூலமே எடுக்க வேண்டிய நிலை வரும். இந்த செயலியினை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து, நாமும் பயனடைந்து, நம் குடும்பத்தினரையும், நாட்டையும் பாதுகாக்கலாம்.

“ஆரோக்கிய சேது” செயலி தொடர்பாக ஏதேனும் புகார் அல்லது குறைபாடுகள் குறித்து support.aarogyasetu@gov.in என்ற மின் அஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்