ஊரடங்கால் குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள்

ஊரடங்கால் குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள்.

Update: 2020-04-29 01:41 GMT
கண்டாச்சிமங்கலம்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் அன்றாட உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் குடுகுடுப்பைகாரர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பாப்பான்குளத்தெரு விஸ்தரிப்பு பகுதியில் குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி நள்ளிரவு நேரத்தில் வீடு வீடாக சென்று குடுகுடுப்பை அடித்து, குறி சொல்லி விட்டு, மறுநாள் பகல் நேரத்தில் அந்த வீடுகளுக்கு சென்று பணம் வசூலித்து பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குடுகுடுப்பைக்காரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்கள், அன்றாட உணவு பொருட்கள் கூட வாங்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.

இதுகுறித்து குடுகுடுப்பைக்காரர் ஒருவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குறி சொல்வதற்காக செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றோம். இதனால் எங்களுக்கு முற்றிலும் வருமானம் இல்லாமல் போனது. ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறோம். எனவே வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் என்னை போன்ற குடுகுடுப்பைக்காரர்கள் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்