பெண்களை மிரட்டி பணம் பறிப்பு: வாலிபரின் நண்பர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை பரபரப்பு தகவல்கள்

பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபரின் நண்பர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

Update: 2020-04-29 00:55 GMT
நாகர்கோவில், 

பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபரின் நண்பர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பணம் பறிப்பு

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26), பட்டதாரியான இவர் சென்னை பெண் டாக்டர் உள்பட பல பெண்களிடம் நெருங்கி பழகி மிரட்டி பணம் பறித்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக பெண் டாக்டர், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஆகிய 2 பேர் துணிச்சலாக புகார் கொடுத்தனர். தற்போது, பல பெண்களை ஏமாற்றிய காசி ஜெயிலில் உள்ளார்.

நண்பர்களிடம் விசாரணை

இதற்கிடையே பெண்களை ஏமாற்றியதில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே காசியின் நண்பர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் காசியின் நண்பர்கள் 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது “காசி எப்போதும் நிறைய பணம் வைத்திருப்பார். அந்த பணத்தை எங்களுக்கு செலவு செய்வார். நாங்கள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். எனவே நாங்கள் காசியுடன் நெருங்கி பழகினோம். ஒன்றாக மது அருந்துவோம். ஆனால் காசி பெண்களுடன் பேசுவது மற்றும் பணம் கேட்டு மிரட்டுவது பற்றி எங்களிடம் இதுவரை கூறியதில்லை. அது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பணம் செலவழிப்பதால் மட்டுமே பழகினோம். மற்றபடி எங்களுக்கும், பணம் பறிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை“ என்று 4 பேரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை

இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் விடுவித்தனர். ஆனாலும் காசி விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்