வத்திராயிருப்பு அருகே மழையால் சேதமான வாழைக்கு இழப்பீடு - விவசாயிகள் கோரிக்கை
வத்திராயிருப்பு பகுதியில் பெய்த மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. கோடைகால வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பெய்த பலத்த மழையால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் மழையால் அப்பகுதியில் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர்பட்டி பகுதியில் ஒன்றறை ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமாகின. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி குருசாமி கூறுகையில், ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழைக்காய்கள் மற்றும் வாழைப்பூ வழக்கமான விற்பனையை விட குறைந்த அளவில் மட்டுமே விற்பனையாகிறது. இதனால் அதிக அளவிலான வாழைக்காய் மற்றும் வாழைப்பூக்கள் வீணாகி வருகின்றன.
இந்த நிலையில் விவசாயிகள் மேலும் பாதிப்படையும் வகையில் மழையால் வாழை மரங்களும் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வாழைக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.