சிறுதொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க அரசு உதவி செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு குமாரசாமி வலியுறுத்தல்

சிறுதொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தினார்.

Update: 2020-04-28 23:46 GMT
ராமநகர், 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மனைவி அனிதா குமாரசாமி ஆகியோர் ராமநகரில் நேற்று ஏழை மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கினர். இதில் அவர்களது மகன் நிகில், மருமகள் ரேவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“ராமநகர், சன்னபட்டணா தொகுதிகளை சேர்ந்த 1.20 லட்சம் குடும்பங்களுக்கு உணவு தானிய தொகுப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்.

இதன் மதிப்பு ரூ.5.50 கோடி ஆகும். அடுத்து வருகிற நாட்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் கூப்பன் கொடுத்து உணவு தானிய தொகுப்பு வினியோகம் செய்யப்படும்.

முன்எச்சரிக்கை நடவடிக்கை

எனது மகன் திருமண செலவுக்கு வைத்திருந்த பணத்தை ஏழை மக்களின் நலனுக்காக செலவு செய்கிறேன். அரிசி, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் போன்ற பொருட்களை வழங்குகிறோம். ராமநகரில் கொரோனா அறிகுறி இருந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போதைக்கு பாதிப்பு இல்லை என்றாலும் வரும் நாட்களில் வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளது. ராமநகர் சிறை ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கவனம் செலுத்தவில்லை

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது பெரிய நிறுவனங்களின் முதலாளிகளுக்கு தான் பயன்படும். இதனால் சாமானிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஏழை மக்களுக்கு உதவ வேண்டும்.

சிறுதொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் குறித்து மத்திய அரசு சரியான நிலைப்பாட்டுடன் செயல்படவில்லை. சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு பெண் தான் சாகுபடி செய்த வெங்காயத்தை விற்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினை

இது ஒரு பெண் விவசாயியின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த விவசாயிகளின் நிலையும் இப்படித்தான் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.450 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளனர். அந்த நிதியை எடியூரப்பா உடனே விடுவிக்க வேண்டும்.”

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்