நீடாமங்கலம் ஒன்றிய ஆணையருக்கு கொலை மிரட்டல் தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
நீடாமங்கலம் ஒன்றிய ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் ஒன்றிய ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ஒன்றிய ஆணையர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய ஆணையராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம். இவர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் கடந்த 27-ந் தேதி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது என்னிடம் செல்போனில் பேசிய மன்னார்குடி மாடர்ன் நகரில் வசித்துவரும் விசுவநாதன் மகன் அண்ணாதுரை என்பவர் வாய்க்கு வந்தபடி திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் கொரோனா தடுப்பு பணிகளையும் செய்யவிடாமல் தடுத்தார். இதேபோல் நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். இதனால் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே அண்ணாதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
வழக்குப்பதிவு
புகாரின் பேரில் அண்ணாதுரை மீது நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அண்ணாதுரை நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆவார்.
இவர் ஒன்றிய ஆணையர் ஆறுமுகத்திடம், செல்போனில் பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய ஆணையருக்கு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.