தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 7 மாத பெண் குழந்தை உள்பட 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 மாத பெண் குழந்தை உள்பட 9 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Update: 2020-04-28 22:45 GMT
தஞ்சாவூர், 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 7 மாத பெண் குழந்தை உள்பட 9 பேர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினர். 22 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

55 பேர் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணம் அடைந்த 24 பேர் வீடு திரும்பினர். 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 பேரும், வல்லம் பகுதியை சேர்ந்த 2 பேரும், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 7 மாத பெண் குழந்தையும் அடங்குவர். நேற்று மட்டும் 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

22 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை

இதன் மூலம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 22 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக்குழு கண்காணிப்பு அலுவலர் சண்முகம், கலெக்டர் கோவிந்தராவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதாலிங்கராஜ், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் டாக்டர்கள் குணம் அடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

14 நாட்கள் தனிமை

குணமடைந்து வீடு செல்லும் 9 பேரும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற 3,315 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

இதில் 2,932 பேருக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 328 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

மேலும் செய்திகள்