ஸ்ரீரங்கத்தில், பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி படுகொலை துண்டித்த தலையுடன் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் போலீசில் சரண்

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். துண்டித்த தலையுடன் சென்று அண்ணன், தம்பி உள்பட 3 பேர் போலீசில் சரணடைந்தனர்.

Update: 2020-04-28 22:23 GMT
திருச்சி, 

ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். துண்டித்த தலையுடன் சென்று அண்ணன், தம்பி உள்பட 3 பேர் போலீசில் சரணடைந்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிரபல ரவுடி

திருச்சி ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் என்ற தலைவெட்டி சந்துரு(வயது 39). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

சந்திரமோகன் நேற்று காலை தனது ஸ்கூட்டரில் 2½ வயது மகள் அபிநிதியுடன் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் ரெயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஒரு கார், சந்திரமோகன் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சந்திரமோகன், தனது குழந்தையுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

தலையை துண்டித்து கொலை

இது விபத்து என எண்ணிய சந்திரமோகன், தனது குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ என எண்ணி தூக்கினார். அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர், குழந்தையை அவரது கையில் இருந்து வாங்கி ஓரமாக வைத்து விட்டு, அக்குழந்தை கண் முன்னே சந்திரமோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்தம் வெளியேறி அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

ஆனாலும் அவர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. பின்னர் அவர்களில் ஒருவர், கொலையுண்ட சந்திரமோகனின் தலையை அரிவாளால் துண்டித்து தனியே எடுத்தார். பின்னர் உடலை மட்டும் மேம்பாலத்திலேயே போட்டு விட்டு, தலையை எடுத்து தாங்கள் வந்த காரின் முன்புற சீட்டின் கீழ் வைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மூவரும் சரணடைந்தனர்.

போலீசில் சரண்

ரத்தம் சொட்ட, சொட்ட துண்டித்த மனித தலையுடன் 3 பேர் போலீஸ் நிலையத்திற்கு வந்ததை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சந்துருவை கொன்று தலையை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்து சரண் அடைந்தனர். இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஸ்ரீரங்கம் ரெயில்வே டிரைனேஜ் தெருவை சேர்ந்த சுரேஷ் (35), அவரது தம்பி சரவணன் (30) மற்றும் இவர்களது சித்தப்பா மகன் செல்வகுமார் (25) என்று தெரியவந்தது.

முன்விரோதம்

இவர்களில் சரவணன் வழக்கு ஒன்றில் சிக்கி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். அப்போது கோர்ட்டுக்கு வந்த ரவுடி சந்திரமோகன், ‘நீ என்ன ஸ்ரீரங்கத்தில் என்னைவிட பெரிய ஆளா? ஒழுங்காக இருக்காவிட்டால் உன் தலையை வெட்டி வீசிவிடுவேன் என சரவணனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், தன்னை தீர்த்து கட்டுவதற்குள் முந்திக்கொண்டு, தனது தம்பிகளுடன் சேர்ந்து சந்திரமோகன் தலையை வெட்டி துண்டாக்கி படுகொலை செய்ததாக சரவணன் போலீசில் தெரிவித்துள்ளார்.

பரபரப்பு

பின்னர் மேம்பாலத்தில் கிடந்த தலை இல்லாத உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் வந்த கார் மற்றும் கொலையுண்டவரின் ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் வழக்குப்பதிந்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு நேரத்தில், ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்