உழவர், சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் 11,687 பேருக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்

உழவர் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 687 பேருக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-28 21:55 GMT
கடலூர்,

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடலூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு அட்டை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் குடும்ப தலைவர் இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணத்திற்கான நிவாரண தொகை கோரி நிலுவையில் இருந்த மனுதாரர்களுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 344 பேருக்கு ரூ.68 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

இதை மேற்கண்ட மனுதாரர்கள் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து தொகையை எடுத்துக்கொள்ளலாம். மேலும் தற்போது முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உழவர் அடையாள அட்டை பெற்றுள்ள விவசாய குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை, உறுப்பினர் திருமண உதவித்தொகை, உறுப்பினரை சார்ந்து வாழும் நபருக்கு திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, தற்காலிக இயலாமை உதவித்தொகை ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டிற்கு ரூ.13 கோடியே 28 லட்சத்து 31 ஆயிரம் வரப்பெற்றுள்ளது.

வங்கி கணக்கு

இதனால் இந்த திட்டத்தின் கீழ் மனு கொடுத்து, நிலுவையில் உள்ள 11 ஆயிரத்து 343 பேர் பயன் பெறும் வகையில் இந்த மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவுக்கும் இந்த தொகை பிரித்து தற்போது வழங்கப்பட்டு உள்ளது. இதை உடனடியாக சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொகையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆகவே இந்த உதவித்தொகையை பயனாளிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வங்கிகளுக்கு சென்று எடுத்து பயன்பெறலாம். மேலும் சந்தேகம் இருப்பின் சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்களை நேரில் அணுகலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்