சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் - கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 225 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

Update: 2020-04-28 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் களபணியாற்றும் அரசுதுறைகளை சார்ந்த பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்திட வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை கலெக்்டர் வீரராகவராவ் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களில் 15 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நோய் தொற்று உள்ள பகுதிகள் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கலெக்்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இலவச தொலைபேசி எண்ணிற்கு வந்த 479 அழைப்புகளில் மருத்துவ உதவி, உணவு தேவை, சுகாதார நடவடிக்கை போன்ற கோரிக்கைகள், உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2 ஆயிரத்து 702 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 ஆயிரத்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 225 கடைகளுக்கு அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் எல்லை பகுதிகள் சீல்வைக்கப்பட்டு 27 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை சாவடிகளை கடந்து யாரும் உள்ளே வராத வகையில் காவல்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்குள் நுழைந்த 298 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தூய்மை பணி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முக கவசம், கையுறை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தனித்திருத்தல் போன்றவைகளை கடைபிடித்தால் கொரோனா பாதிப்பில் இருந்து நாமும், நம்மை சுற்றி உள்ளவர்களும் பாதுகாப்பாக இருக்கலாம். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்