அதிகாரிகள், ஊழியர்களை உள்ளே வைத்து வங்கிக்கு ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு

பரமத்தி வேலூரில் அதிகாரிகள், ஊழியர்களை உள்ளே வைத்து வங்கிக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-28 23:30 GMT
பரமத்தி வேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசின் மறு உத்தரவு வரும் வரை வங்கிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரமத்தி வேலூரில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகிய இரு வங்கிகளும் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பரமத்திவேலூர் தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான வருவாய் துறையினர், பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்கு சென்று பார்த்தபோது அந்த வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வங்கிக்குள் யாராவது உள்ளார்களா? என சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளனர். பதில் வராததால் வங்கிக்குள் யாரும் இல்லை என நினைத்து ஏற்கெனவே பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்து விட்டு சென்று விட்டனர்.

இதற்கிடையில், அந்த வங்கியை பூட்டிக்கொண்டு உள்ளே அதிகாரிகளும், ஊழியர்களும் வேலைப்பார்த்து கொண்டிருந்தனர். தாசில்தாரும், வருவாய்த் துறை யினரும் வெளியே இருந்து கூப்பிட்டது உள்ளே இருந்தவர்களுக்கு கேட்கவில்லை. எனவே அவர்கள் வங்கிக்கு ‘சீல்‘ வைத்து விட்டனர். இதனை அறியாத வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியே வந்து பார்த்த போது வங்கிக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே வங்கியின் மேலாளர், போலீசாரை தொடர்பு கொண்டு, தங்களை உள்ளே வைத்து வங்கிக்கு ‘சீல்‘ வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் செல்வராஜை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு வந்த தாசில்தார், நாங்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கதவுகள், ஜன்னல்களை தட்டியும், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் தகவல் இல்லாததால், யாரும் உள்ளே இல்லை என கருதி வங்கிக்கு ‘சீல்‘ வைத்ததாக கூறினார். பின்னர் சீலை பிரித்து வங்கியை திறந்து உள்ளே சிக்கியிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வெளியே அனுப்பினர். பின்னர் தடையை மீறி வங்கியை திறக்கக்கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக வருவாய் துறையினர் காவிரி சாலையில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றனர். அங்கு பணி செய்துக்கொண்டிருந்த அதிகாரிகளையும், ஊழியர்களையும் வெளியேற்றி விட்டு அந்த வங்கிக்கும் ‘சீல்‘ வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்