செங்கோட்டையில் முன்அறிவிப்பு இல்லாமல் தொடரும் மின்தடை - பொதுமக்கள் அவதி
செங்கோட்டையில் முன்அறிவிப்பு இல்லாமல் தொடரும் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர்.
செங்கோட்டை,
கொரோனா வைரசை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால் மின்விசிறி இல்லாமல் வீடுகளுக்குள் இருக்க முடியாது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக செங்கோட்டையில் முன் அறிவிப்பு இல்லாமல் இரவு, பகல் பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வீட்டிலேயே அடைபட்டு இருக்கும் பொதுமக்கள் பொழுது போக்கை கழிப்பதற்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்து வருகின்றனர். இந்த தொடர் மின்தடையால் தொலைக்காட்சி பார்க்க முடியாமலும், மின்விசிறி செயல்படாமலும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் இஸ்லாமியர் ரமலான் நோன்பு ஆரம்பித்து விட்டதால் நோன்பு வைத்துள்ளவர்களுக்கு வீடுகளில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து சமையல் செய்ய வேண்டும். பின்னர் 4 மணிக்குள் சாப்பிட்டு விட்டு வீட்டிலே தொழுகை நடத்த வேண்டும். இதுபோன்ற நேரங்களிலும் மின்தடை ஏற்படுகிறது.
இதுசம்பந்தமாக செங்கோட்டையை சேர்ந்த மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மின்நிலையத்தில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வேலை பார்க்க வேண்டும் என்றால் மின்சாரத்தை நிறுத்தி விட்டு தான் பார்க்க முடியும். அதனால் மின்தடை ஏற்படுகிறது. நகரில் டிரான்ஸ்பார்மர் எதிர்பாராத வகையில் பழுது ஏற்பபடும்போது மின்தடை ஏற்படுகிறது. புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளதால் இனி மின்தடை அடிக்கடி இருக்காது“ என்றார்.