நாகர்கோவிலில் பரபரப்பு சரலூரில் தடையை மீறி மீன் விற்பனை சூறை மீன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில் சரலூரில் தடையை மீறி மீன் விற்பனை நடந்தது. சூறை மீன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-28 00:28 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் சரலூரில் தடையை மீறி மீன் விற்பனை நடந்தது. சூறை மீன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. குமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வழக்கமான காய்கறி, மீன் சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

மீன் உணவை அதிகமாக உட்கொள்ளும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், மீன் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்றும் நடமாடும் மீன் அங்காடிகள் மூலம் நிபந்தனைகளுடன் மீன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்காலிக சந்தைகளில் மீன் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகமும், மீன்வளத்துறையும் ஏற்பாடு செய்துள்ளன. நடமாடும் மீன் அங்காடிகளில் மீன்துறை நிர்ணயம் செய்யும் விலையில்தான் மீன்களை விற்பனை செய்யவும் வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திடீர் பரபரப்பு

கடந்த 2 நாட்களாக நாகர்கோவிலில் தற்காலிக சந்தைகளில் மீன் வியாபாரம் நடந்து வருகிறது. இந்தநிலையில் மீன் விற்பனை செய்யக்கூடாது என்று மாநகராட்சியால் தடை விதிக்கப்பட்டு இருந்த நாகர்கோவில் சரலூர் சந்தையில் நேற்று சில வியாபாரிகள் மீன் விற்பனை செய்தனர்.

தகவல் அறிந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று அங்கு திறந்திருந்த கடைகளை பூட்ட செய்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சூறை மீன்களை பறிமுதல் செய்தனர். சுமார் 50 கிலோ எடை கொண்ட அந்த மீன்களை அதிகாரிகள் பிளச்சிங் பவுடர் தூவி அழித்து, மாநகராட்சி குப்பைக்கிடங்கில் புதைத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கணேசபுரத்தில்...

இதேபோல நாகர்கோவில் கணேசபுரம் பகுதியில் மீன் சந்தை மூடப்பட்டுள் ளது. அந்த சந்தையில் மீன் வியாபாரம் செய்யக்கூடிய ஆண், பெண் வியாபாரிகள் சிலர் அந்த சந்தை அமைந்துள்ள தெருவில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மீன் வியாபாரம் செய்தனர். பொதுமக்களும் அங்கு அதிகமாக கூட்டம் போடாமல் மீன்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் செய்திகள்