மண் வளம் காக்க பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் அறிவுறுத்தல்

மண் வளம் காக்க பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2020-04-27 23:42 GMT
நீடாமங்கலம், 

மண் வளம் காக்க பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் அறிவுறுத்தி உள்ளார்.

பசுந்தாள் உரப்பயிர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கீழப்பட்டு கிராமத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியில் துறை உதவி பேராசிரியர் அனுராதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மண்ணியல் துறை உதவி பேராசிரியர் கூறியதாவது:-

செயற்கை உரம்

பசுந்தாள் உரமிடுவது மிகவும் இன்றியமையாதது. சணப்பை, சீமை அகத்தி, சித்தகத்தி, தக்கை பூண்டு, மணிலா அகத்தி, கொளுஞ்சி, பில்லிபெசரா, கிளைரிசிடியா போன்ற பசுந்தாள் உரங்கள் நெடுங்காலமாக நெல் வயலில் இடப்பட்டு வரப்பட்டவை. ஆனால் தற்போது பசுந்தாள் உரமிடுவது வெகுவாக குறைந்துவிட்டது.

இன்று செயற்கை உரவிலையின் உயர்வினால் பசுந்தாள் உரத்தின் தேவையை மறுபடியும் உணர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பசுந்தாள் உரங்கள் விரைவில் மக்குகின்றன. இவை மண் வளம் காக்க உதவும். எனவே விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை அதிக அளவு சாகுபடி செய்ய வேண்டும்.

தக்கைப்பூண்டு

தக்கைப்பூண்டு என்ற பசுந்தாள் உரப்பயிர் பாக்டீரியா முடிச்சுகளை வேர் பகுதிகளிலும் கொண்டிருப்பதால் அதிக தழைச்சத்தை ஆகாயத்தில் இருந்து கிரகித்து சேர்க்கின்றது. விதைத்த 45-ம் நாளில் பூக்கும் இப்பயிரை மடக்கி உழுதால், எக்டேருக்கு 20.4 முதல் 24.9 டன்கள் பசுந்தாளும், 146 முதல் 219 கிலோ தழைச்சத்தும் கிடைக்கிறது.

இதை நெல் வயல்களில் நட்டு 45-60 நாட்களில் அறுவடை செய்து நிலத்தில் மிதித்து விடலாம். இரண்டாம் போக நெல் பயிரை நடவும் செய்யலாம். இதனால் எக்டேருக்கு 15 டன் தழை உரமும் 13 கிலோ தழைச்சத்தும் கிடைக்கிறது.

தழைச்சத்து

இதன் மூலம் 2-வது நெற்பயிர் அதிக வளர்ச்சியையும், 9 சதவீதம் வரை அதிக விளைச்சலையும் கொடுப்பதுடன் மண் வளத்தையும் பாதுகாக்கிறது.

தக்கைப்பூண்டு பயிரை நெல்லுக்கு முன்னும், இரு பருவ நெல் பயிருக்கு இடையில் உள்ள காலத்திலும் பயிர் செய்து உரமாக பயன்படுத்தினால் ரசாயன உரத்திற்கு இணையான 50 கிலோ தழைச்சத்தை பசுந்தாள் பயிர் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்