பொங்கலூர் ஒன்றியத்திற்கு ரூ.12 லட்சம் கிருமிநாசினி தெளிக்கும் எந்திரம் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
பொங்கலூர் ஒன்றியத்திற்கு ரூ.12 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பொங்கலூர்,
பொங்கலூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் நவீன கிருமி நாசினி தெளிக்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கேத்தனூரில் நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். புதிய நவீன கிருமி நாசினி எந்திரத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் வழங்கினார். பல்லடம் நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை பணியில் 220 தூய்மை பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் என சுமார் 300 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் வழங்கிய தலா 1 கிலோ துவரம்பருப்பை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் குமார், துணைத்தலைவர் அபிராமி அசோகன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் சித்ரா அரிகோபால், பொங்கலூர் ஒன்றியக்கவுன்சிலர் பிரியா, பொங்கலூர் ஒன்றிய ஆணையாளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அதிகாரி (ஊராட்சி) மகேஷ்வரன் பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன்,போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல்,மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர்கள் சித்துராஜ்,ராமமூர்த்தி, பல்லடம் நகராட்சி பொறியாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.