கொரோனா ஊரடங்கில் ஆக்கப்பூர்வ முயற்சி: மாணவர்கள் கைவண்ணத்தில் உருவான எழில்மிகு ஓவியங்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆக்கப்பூர்வ முயற்சியாக மாணவ-மாணவிகள் கைவண்ணத்தில் எழில்மிகு ஓவியங்கள் உருவாகி உள்ளன.

Update: 2020-04-27 02:08 GMT
நெல்லை, 

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆக்கப்பூர்வ முயற்சியாக மாணவ-மாணவிகள் கைவண்ணத்தில் எழில்மிகு ஓவியங்கள் உருவாகி உள்ளன.

கொரோனா ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடிக்கிடக்கின்றன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் ஆண்டு இறுதி பருவத்தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கொரோனா விடுமுறையில் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கேரம், தாயம், கயிறு தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

ஓவிய பயிற்சி

சில மாணவ-மாணவிகள் புதிய கல்வியை வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் படிக்கத் தொடங்கி உள்ளனர். மேலும் சிலர் வண்ண ஓவியங்கள் வரைந்து பழகுகின்றனர். பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவர்கள் சிவராம் கலைக்கூடம் மூலம் ஓவிய பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்கள் கொரோனா விடுமுறை காலத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் தினமும் ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை புகைப்படம், வீடியோ எடுத்து செல்போன் வாட்ஸ்-அப் மூலம் ஆசிரியருக்கு அனுப்பி வைத்தனர். அதனை மதிப்பீடு செய்து, திருத்தம் மற்றும் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

காட்சிப்படுத்தினர்

மாணவர்கள் தங்கள் கைவண்ணத்தில் உருவான எழில்மிகு ஓவியங்களை நேற்று வீட்டிலேயே வரிசையாக வைத்து கண்காட்சியாக காட்சிப்படுத்தினர். அதனை தங்களது குடும்பத்தினரை பார்க்க வைத்து மகிழ்ந்தனர். மேலும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலம் தங்களது உறவினர்கள், சக ஓவிய பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஓவிய ஆசிரியர் கணேசன் கூறுகையில், “குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாவிட்டாலும், விடுமுறையில் வீட்டில் இருப்பதை பயனுள்ளதாக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான முயற்சியாக வாட்ஸ்-அப் மூலம் ஓவிய பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்மூலம் அவர்கள் படைத்த ஓவியங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வித்தியாசமான முறையில் கண்காட்சியாக காட்சிப்படுத்தி உள்ளனர்“ என்றார்.

மேலும் செய்திகள்