வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்த கடைக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க விவரங்கள் சேகரிப்பு
வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்த கடைக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க நாகர்கோவிலில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்,
வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்த கடைக்காரர்களுக்கு நிவாரணம் வழங்க நாகர்கோவிலில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பாதிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் மற்றும் அனைத்து வித தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலமாக தமிழக அரசு நிவாரண தொகை வழங்கி வருகிறது. இதேபோல கடைக்காரர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடைக்காரர்கள்
அதாவது வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து கடைக்காரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் வணிகவரி அலுவலகத்தில் பதிவு செய்த கடைக்காரர்களின் விவரம் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் கிராம நிர்வாக அதிகாரிகள் குழுவாகவும், தனித்தனியாகவும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
நாகர்கோவிலில் நேற்று அனைத்து இடங்களிலும் இந்த பணி நடந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் கடைக்காரர்களின் விவரங்களை சேகரிப்பதில் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
செல்போன் நம்பர்
எனினும் கடைகளில் எழுதப்பட்டிருந்த செல்போன் நம்பர் மூலமாக கடைக்காரர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஆனால், செல்போன் நம்பர் எழுதாத கடைக்காரர்கள் பற்றிய விவரத்தை சேகரிக்க முடியவில்லை. இதனால் வேறு எந்த முறையில் கடைக்காரர்கள் பற்றிய விவரத்தை சேகரிப்பது என்பது குறித்து கலந்தாலோசித்து வருகிறார்கள்.