நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் இறைச்சி விற்பனை சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கிச் சென்றனர்

அசைவ பிரியர்கள் இறைச்சி கடைகளில் திரண்டதால் நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இறைச்சி விற்பனை நடந்தது.

Update: 2020-04-27 00:27 GMT
நாகர்கோவில், 

அசைவ பிரியர்கள் இறைச்சி கடைகளில் திரண்டதால் நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இறைச்சி விற்பனை நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றிய அவர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

அசைவ பிரியர்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அதே சமயம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல எந்த தடையும் இல்லை. அதன்படி குமரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் வெளியே சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது. அப்போது, காய்கறி, மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனினும் மக்கள் அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சியை சாப்பிட்டு பழக்கப்பட்ட அசைவ பிரியர்கள், கொரோனா அச்சுறுத்தல் சமயத்திலும் அன்றைய தினம் இறைச்சிக்காக கடைகளில் படையெடுக்கும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகர்கோவிலில் ஏராளமான அசைவ பிரியர்கள், இறைச்சி வாங்குவதற்காக இறைச்சி கடைகளில் திரண்டனர்.

சமூக இடைவெளி...

இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி போலீஸ் பாதுகாப்புடன் இறைச்சி விற்பனை நடந்தது. அப்போது அரசு அறிவுறுத்தியபடி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று இறைச்சி வாங்கும்படி கூறினார்கள். அதன்படி அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இறைச்சி வாங்கி சென்றதை காண முடிந்தது. இறைச்சி கடைகளில் மக்கள் குவிந்த அதேவேளையில் காய்கறி சந்தைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சந்தையில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும் செய்திகள்