சீர்காழியில், கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த டிரோன் கேமரா மீது கல்வீசிய வாலிபர் கைது
சீர்காழியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த டிரோன் கேமரா மீது கல்வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி,
சீர்காழியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த டிரோன் கேமரா மீது கல்வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
டிரோன் கேமரா மீது கல்வீச்சு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியில் ஊரடங்கின்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு கிராமங்களில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தில் வயல் பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் கண்டுபிடித்து டிரோன் கேமராவை பறக்கவிட்டு கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை விரட்டினர். அப்போது ஒரு இளைஞர், டிரோன் கேமரா மீது கல்வீசி தாக்கினார். இந்த காட்சி கேமராவில் பதிவானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
வாலிபர் கைது
இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிக்கெட் விளையாடிய 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், கல்லால் டிரோன் கேமராவை தாக்கியவர் எடமணல் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம்(வயது 20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.
மேலும் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரையும் போலீஸ் நிலையம் முன்பு நிற்க வைத்து விழித்திரு... தனித்திரு... கிரிக்கெட் விளையாடாமல் வீட்டில் இரு...என்ற வாசகத்தை கூறி உறுதிமொழி ஏற்க செய்தனர்.