படகு மூலம் மாமல்லபுரம் வருகை; சென்னை ராயபுரத்தை சேர்ந்த தாய், 2 மகன்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - வருவாய்த்துறை நடவடிக்கை

கடல் வழிமார்க்கமாக படகு மூலம் வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகன்களை 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2020-04-26 22:30 GMT
மாமல்லபுரம், 

கொரோனா வைரஸ் பரவி வருதை தடுக்கும் பொருட்டு ஊரடங்குக்கு உத்தரவு விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலை முழுவதும் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னை ராயபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு மகன்களுடன் சென்னை ராயபுரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் மாமல்லபுரம் வந்து, இங்குள்ள மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

தனிமைப்படுத்த உத்தரவு

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மாமல்லபுரம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாமல்லபுரம் வருவாய்த்துறை அதிகாரி ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், படகு மூலம் பெண் உள்பட 3 பேர் சென்னையில் இருந்து முறைகேடான பயணம் செய்து வந்து தங்கியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும், இதைத்தொடர்ந்து, அப்பெண் உள்பட தங்கியிருந்த வீட்டில் உள்ள 3 பேரையும் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உத்தரவிட்டு அந்த வீட்டின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டினர்.

கொரோனா பரிசோதனை

தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றான ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், 3 பேரும் அங்கிருந்து வந்தவர்கள் என்பதாலும் 21 நாட்களுக்கு பிறகு 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறைக்கு பரிந்துரைத்து உள்ளனர்.

இச்சம்பவத்தால் மாமல்லபுரம் மீனவர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்