சிறுத்தையை வேட்டையாடுவது போல் ‘டிக்-டாக்’; 4 பேருக்கு அபராதம் - புளியங்குடி வனத்துறையினர் நடவடிக்கை

சிறுத்தையை வேட்டையாடுவது போல் ‘டிக்-டாக்’ வெளியிட்ட 4 பேருக்கு புளியங்குடி வனத்துறையினர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

Update: 2020-04-26 23:15 GMT
புளியங்குடி. 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மைப்பாறை கிராமத்தில் உள்ள பூனைப்பாறை பகுதியில் சிலர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தையை வேட்டையாடுவது போல் வீடியோ எடுத்து ‘டிக்-டாக்’கில் வெளியிட்டனர். மேலும் வலைத்தளங்களிலும் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கோவில்பட்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி, புளியங்குடி வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின், வனவர் அசோக்குமார், வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், கோபிநாத், மகாதேவ பாண்டியன், கந்தசாமி, பாரதி, வனக்காவலர்கள் ராஜா, சுப்பையா ஆகியோரை கொண்ட தனிப்படையினர் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், மைப்பாறை கிராமத்தை சேர்ந்த சண்முகையா மகன் நாகராஜ், சுப்பையா மகன் மாரிச்சாமி, சண்முகவேல் மகன் ஆனந்தராஜ், சின்ன மாடசாமி மகன் ஆனந்தகுமார் ஆகியோர் என்பதும், சிறுத்தையை வேட்டையாடுவது போன்று சித்தரித்து ‘டிக்-டாக்’கில் பதிவிட்டதும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் 4 பேருக்கும் தலா 30 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வனத்துறை சட்டவிதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்