வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் மூடப்பட்டது
பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால், அந்த தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தீயணைப்பு வீரர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதால், அந்த தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
தீயணைப்பு நிலையம் மூடல்
பெரம்பலூரில், தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைப்பதற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த தீயணைப்பு வீரருடன் பணிபுரிந்த சக வீரர்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
மேலும் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் அவருடன் பணிபுரிந்த 18 வீரர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக நேற்று முதல் மூடப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களுக்கு மூடப்படும். முன்னதாக நிலையத்திலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனங்களிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தீயணைப்பு நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகையை நகராட்சியினர் ஒட்டியுள்ளனர்.
ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
பெரம்பலூர் பகுதியில் ஏதும் தீ விபத்து நடந்தால், அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் வீரர்கள் வந்து தீயை அணைப்பார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீயணைப்பு வீரர் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள 24 குடும்பத்தினரையும் சுகாதாரத்துறையினர், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரரின் மனைவி, மகள், மகன் ஆகியோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரரின் சொந்த ஊரான அய்யலூரிலும் சுகாதாரத்துறையினர் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தீயணைப்பு வீரரின் நண்பரான லாடபுரத்தை சேர்ந்த ஒருவரை, சுகாதாரத்துறையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவரின், குடும்பத்தினர் 5 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.