நன்னிலம் பகுதியில் வெள்ளரி பழம் அறுவடை பணிகள் தீவிரம்

நன்னிலம் பகுதியில் வெள்ளரி பழம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Update: 2020-04-25 23:31 GMT
நன்னிலம், 

நன்னிலம் பகுதியில் வெள்ளரி பழம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளரி பழம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் வெள்ளரி பழம், தர்பூசணி, நுங்கு விற்பனை விறு, விறுப்பாக நடைபெறும். இதனால் கோடை காலத்துக்கு ஏற்ற வகையில் விவசாயிகள் வெள்ளரி, தர்பூசணியை அதிக அளவு சாகுபடி செய்து இருப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்ட பகுதிகளில் வெள்ளரி பழம் சாகுபடி மிக குறைவான அளவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கிராம பகுதிகளில் அதன் தேவை அதிகரித்து காணப்படுகிறது.

அறுவடை தீவிரம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி பழத்தை அறுவடை செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் வெள்ளரி பழம் சாகுபடி செய்துள்ள விவசாயி ஜெயபால் கூறியதாவது:-

வெள்ளரி பழம் குளிர்ச்சி தரக்கூடியது. மருத்துவ குணம் கொண்டது. கோடை காலத்தில் இதன் தேவை அதிகமாக உள்ளது. இதனை வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆண்டு ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை என்றாலும், உள்ளூர் தேவை அதிகரித்து காணப்படுகிறது. கிராம மக்கள் இதனை விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் வெள்ளரி பழம் சாகுபடி செய்தவர்களுக்கு ஊரடங்கால் எந்த பாதிப்பும் இல்லை.

வெள்ளரி பிஞ்சு

வெள்ளரி பிஞ்சுக்கு என்று தனி ரகம் உண்டு. இந்த பகுதியில் தற்போது சாகுபடி செய்யப்பட்டு இருப்பது வெள்ளரி பழத்திற்கான ரகம் ஆகும். நான் 1 ஏக்கர் பரப்பில் வெள்ளரி பழம் சாகுபடி செய்துள்ளேன். தற்போது வெள்ளரி பழத்தை அறுவடை செய்து வியாபாரிகளுக்கு கொடுக்கிறோம்.

வெடிக்கும் நிலையில் உள்ள வெள்ளரி பழத்தை உடனடியாக பனை மட்டை கொண்டு கட்டி வருகிறோம். இதன் பிறகு வெள்ளரி பழத்தை விற்பனைக்கு அனுப்புகிறோம். ஒரு வெள்ளரி பழம் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கிறோம். வியாபாரிகள் ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்