திருப்பூர் மாநகரில் 37 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை - தடுப்பு பணிக்குழு அதிகாரி ஆய்வு

திருப்பூர் மாநகரில் கொரோனா கட்டுப்பாடு மண்டல பகுதியில் உள்ள 37 கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.இதை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு அதிகாரி ஞானசேகரன் ஆய்வு செய்தார்.

Update: 2020-04-25 23:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 கொரோனா கட்டுப்பாடு மண்டல பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2 லட்சத்து 97 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள். கட்டுப்பாடு மண்டல பகுதிகளில் இருந்து மக்கள் யாரும் வெளியே வராத வகையில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல் வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு மண்டல பகுதிகளில் வசிப்பவர்களில் இன்னும் 2 வாரத்துக்குள் பிரசவ தேதி உள்ள கர்ப்பிணிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 37 கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சளி பரிசோதனை நேற்று காலை பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில் நடைபெற்றது. கொரோனா தொற்று எதுவும் ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனரும், கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு அதிகாரியான ஞானசேகரன் நேற்று தாய், சேய் நல விடுதிக்கு சென்று அங்கு கர்ப்பிணிகளுக்கு சளி மாதிரி எடுக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர் குமரானந்தபுரம், சிங்காரவேலன் நகர் பகுதியில் உள்ள கொரோனா கட்டுப்பாடு மண்டல பகுதிக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகர் நல அதிகாரி பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் அதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் அவர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாநகர போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்