கொரோனா பாதித்த லாரி டிரைவருடன் பயணித்தவர்: ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் மாற்று டிரைவருக்கு சிகிச்சை
கொரோனா பாதித்த லாரி டிரைவருடன் பயணித்த மாற்று டிரைவருக்கு, ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊத்தங்கரை,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவருடன் தொடர்பில் இருந்த மாற்று டிரைவர் திருவண்ணாமலையில் மீட்கப்பட்டார். அவருக்கு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதை கண்டறிந்த மருத்துவ அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரித்தனர். இந்த நிலையில் அவருடன் மாற்று டிரைவராக தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு டிரைவர் சென்றது தெரியவந்தது.
இதற்கிடையில் அந்த மாற்று டிரைவர் மாயமானார். அவரை அதிகாரிகள் தேடி வந்தனர். அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தானிப்பாடி கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவிலேயே அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என தெரியவரும். இதற்கிடையே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மீட்ட நிலையில், ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாற்று டிரைவரின் ஆதார் அட்டை உள்ளிட்டவை தர்மபுரியில் இருப்பதாகவும், இந்த நிலையில் அவரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் விட்டு சென்றதாகவும் பொதுமக்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவருடன் உடன் இருந்த மற்றொரு டிரைவர் இன்று(நேற்று) ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வரவில்லை. அவர் கடைசியாக கடந்த 3-ந் தேதி பர்கூர் வந்து சென்றுள்ளார்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும் ஒருவரை நமது மாவட்டம் இல்லை என்றாலும், அவரை அலைக்கழிப்பது முறையல்ல. அவருக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவருக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்கும், தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.