ஊரடங்கால் வீடுகளில் முடக்கம்: ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள்
ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடம் கற்றுத்தருகின்றனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் பாடம் கற்றுத்தருகின்றனர்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மட்டும் நடைபெற வேண்டி உள்ளது. அதேபோல பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தேர்வும் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில் சில தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்த தொடங்கி உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டையிலும் சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருகின்றனர்.
ஒரு மணி நேரம் வகுப்பு
புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை தற்போது நடத்த தொடங்கி உள்ளனர். இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர். அந்த செயலியை மாணவ-மாணவிகள் தங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் அந்த செயலி வழியாக தினமும் ஆசிரியர் ஒருவர் வீட்டில் இருந்தபடி பாடம் நடத்துகிறார். ஒரே நேரத்தில் 60 முதல் 70 மாணவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் செல்போன் திரையில் ஆசிரியரின் முகம் தெரிகிறது. மேலும் அவர் கூறுவதை மாணவர்கள் கேட்டு குறிப்பெடுத்துக்கொள்கின்றனர். மேலும் சந்தேகங்கள் இருந்தால் மாணவ-மாணவிகள் கேள்வி கேட்கின்ற னர். தினமும் ஒரு மணி நேரம் இந்த வகுப்பு நடைபெறுவதாக பள்ளி வட்டாரத்தில் தெரிவித்தனர்.
பாடப்புத்தகங்கள்
பள்ளிகள் திறக்கப்படும் தேதி எப்போது? என தெரியாத நிலையில் தனியார் பள்ளிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக இது போன்ற செயலியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறையை தொடங்கி விட்டனர். புதுக்கோட்டை மட்டுமின்றி, திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தருகின்றனர்.
அரசு பள்ளிகளில் உள்ள நிலை குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் தொடர்பு கொண்டு செல்போனில் அவ்வப்போது பேசி வருகின்றனர். மாணவர்களை தினமும் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வி துறை சார்பில் இணையதளம் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் தற்போது வரத்தொடங்கி உள்ளன. இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை’ என்றார்.