ஊரடங்கை மீறி வெளியூரில் இருந்து வரும் நபர்களால் கொரோனா பரவும் அச்சம் சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே காய்கறி வாகனங்களுக்கு அனுமதி
குமரியில் 11 நாட்களாக புதிதாக தொற்று இல்லாததால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
ஆரல்வாய்மொழி,
குமரியில் 11 நாட்களாக புதிதாக தொற்று இல்லாததால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால் ஊரடங்கை மீறி வெளியூரில் இருந்து வரும் நபர்களால் புதிதாக தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர சோதனைக்கு பிறகே காய்கறி வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ்
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பொதுமக்களும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிலர் மட்டும் கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் அவசியமின்றி வெளியே சுற்றி வருகிறார்கள். அந்த நபர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இவ்வாறு பல்வேறு தரப்பினரின் கடும் முயற்சியாலும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும் குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.
புதிதாக தொற்று இல்லை
குமரியில் இதுவரை கொரோனா தொற்றால் 16 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் சிலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே சமயத்தில், கடந்த 11 நாட்களாக புதிதாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இது குமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதியான நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தேப்பு, அனந்தசாமிபுரம் ஆகிய இடங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது.
வெளியூரில் நபர்கள் வருகை
இதற்கிடையே ஊரடங்கு நீட்டிப்பால் சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் பரிதவிக்கும் குமரி மாவட்ட மக்கள், கால்நடையாகவோ, வாகனங்கள் மூலமாகவோ போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சொந்த ஊருக்கு படையெடுத்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வரும் நபர்கள் ஆரல்வாய்மொழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் சிக்குகிறார்கள். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, கொரோனா அறிகுறி இல்லையென்றால் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். மேலும் அந்த நபர்களிடம், 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்படுகிறது.
கொரோனா பரவும் அச்சம்
அதே சமயத்தில், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களில் சிலர் பதுங்கி இருந்தபடி குமரி மாவட்டத்திற்குள் நுழைந்து விடுவதாக தெரிகிறது. இவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களால் குமரியில் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனவே, பலத்த சோதனைக்கு பிறகே காய்கறி வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுதொடர்பான பல புகார்கள் போலீசாரின் கவனத்துக்கும் சென்றது. இதனையடுத்து ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் டிரைவர், கிளனரை தவிர யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என பார்வையிடுகிறார்கள். யாரும் இல்லையென்றால் மட்டுமே வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் இதே மாதிரியான கெடுபிடி நீடித்தால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர முடியும். கவனக்குறைவாக இருந்தால், குமரி மாவட்ட மக்கள் இன்னும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற மோசமான சூழல் உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.