கர்நாடகத்திற்கு வந்த ரேஷன் அரிசி தமிழ்நாட்டுக்கு விற்பனை - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கர்நாடகத்திற்கு வந்த ரேஷன் அரிசி தமிழ்நாட்டுக்கு விற்பனை செய்யப்படுவதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் கட்சி பாரபட்சமற்ற நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த பணிகளை மேற்கொள்வதில் ஊழல் தாண்டவமாடுகிறது. இது முதல்-மந்திரிக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை.
அரியானாவில் இருந்து கர்நாடகத்திற்கு வரும் ரேஷன் அரிசியை தமிழ்நாட்டுக்கு திருப்பி விட்டு விற்பனை செய்கிறார்கள். 1,879 டன் அரிசியை குடோனில் சேகரித்து வைத்துள்ளனர். பா.ஜனதாவினர் ஓசூரில் இருந்து வணிகர்களை அழைத்து வந்து விற்பனை செய்கிறார்கள். அந்த அரிசியை சர்ஜாப்புராவில் பதுக்கி வைத்திருந்தனர். இந்த தகவல் வெளியான பிறகு அந்த அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
வெட்கக்கேடானது
இந்த விஷயத்தில் போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இதுபற்றி அரசு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் வெட்கக்கேடானது. கடனுக்கான மூன்று மாத தவணை வசூலை ஒத்திவைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ஆனால் வங்கிகள் அதை கண்டுகொள்ளாமல், கடன் பெற்ற பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து தவணை தொகையை வசூலித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் உத்தரவை வங்கிகள் பின்பற்றவில்லை. வங்கி அதிகாரிகளின் கூட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா இதுவரை கூட்டவில்லை. தலைமை செயலாளர் கூட இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை.
கொரோனாவை பரப்புகிறார்கள்
ராமநகர் பசுமை மண்டலத்தில் இருக்கிறது. ஆயினும் பாதராயனபுரா வன்முறையாளர்களை ராமநகர் சிறையில் அடைத்தனர். அந்த மக்களுக்கு அரசு ஏன் தொந்தரவு கொடுக்கிறது என்று தெரியவில்லை. அரசின் பொறுப்பற்ற முடிவை கண்டித்து அந்த பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராமநகர் மாவட்டத்தில் பா.ஜனதாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால், அங்கு கொரோனாவை பரப்புகிறார்கள். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயணுக்கு கோபம் இருந்தால் அதை எங்கள் மீது காட்டட்டும். ராமநகர் மாவட்டத்தை பசுமை மண்டலமாக இருக்க அனுமதியுங்கள். அந்த வன்முறையாளர்களை ராமநகரில் அடைக்க மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆகியோர் ஒப்புக்கொண்டது ஏன்?.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.