ஊரடங்கையொட்டி போலீசார் கண்காணிப்பு: தோப்பில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி - ஆளில்லா குட்டி விமான கேமராவை கண்டதும் தப்பி ஓட்டம்
கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கை ஆளில்லா குட்டி விமான கேமரா வாயிலாக போலீசார் கண்காணித்த போது தைல மரத்தோப்பில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி ஒன்று சிக்கியது. இதன் காரணமாக அந்த ஜோடி தலைதெறிக்க தப்பி ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்குன்றம்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீஸ் குழுவினர் ஆளில்லா குட்டி விமான கேமராவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பட்டுபள்ளி கிராமம் அருகே உள்ள தைல மரத்தோப்பில் நேற்று மதியம் உச்சி வெயிலில் காதல் ஜோடி ஒன்று ஊரடங்கு நேரத்தில் உல்லாசமாக இருந்தது கேமரா மூலம் கண்டறியப்பட்டது.
அப்போது அந்த கேமராவை பார்த்தவுடன் காதலன் ஹெல்மெட்டை போட்டு கொண்டார். அந்த இளம்பெண் காதலன் மடியில் இருந்து வேகமாக எழுந்து துப்பட்டாவால் தனது முகத்தை மறைத்து கொண்டார்.
பின்னர் அந்த காதல் ஜோடியினர் அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு தலைதெறிக்க ஓடினர். அதைத்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளின் பின்னால் காதலி அமர்ந்து கொள்ள ஒருவழியாக அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி மறைந்து சென்றனர்.
ஊரே அடங்கி இருக்கும் போது தைல மரத்தோப்பில் காதலர்கள் உல்லாசத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல சேகண்யம் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் ஆளில்லா குட்டி விமான கேமரா பறந்து வருவதை கண்டதும், ஏரியில் நீந்தி தப்பி செல்லும் காட்சிகளை கும்மிடிப்பூண்டி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.