கடலூர் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்டத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை காலை, மாலை என 2 வேளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை சார்ந்த துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இனி வரும் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கலெக்டர் அன்பு செல்வன் பேசுகையில், வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், குறிப்பாக தாசில்தார்கள் தங்கள் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை காலை, மாலை 2 வேளையிலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் குறித்து தினந்தோறும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் சென்றடைகிறதா? என்று கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்களை கண்காணிக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி சீட்டு கிடைக்காத நபர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.