தர்மபுரி மாவட்டத்தில் 4-ம் கட்டமாக 215 போலீசாருக்கு 7 நாட்கள் ஓய்வு
தர்மபுரி மாவட்டத்தில் 4-ம் கட்டமாக 215 போலீசாருக்கு 7 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. போலீசார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பான முறையில் பணிபுரிவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீசாரில் 33 சதவீத பேருக்கு 7 நாட்கள் தொடர் ஓய்வு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அந்த ஓய்வு நாட்களில் போலீசார் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும், 7 நாட்களுக்கு பிறகு உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின் தகுதியான போலீசார் மீண்டும் பணிக்கு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் சுழற்சி முறையில் ஏற்கனவே 3 கட்டங்களாக போலீசாருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 4-ம் கட்டமாக 215 போலீசாருக்கு தற்போது 7 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட 215 பேரும் வருகிற 29-ந்தேதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அதன்பின்னர் இவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள்.