நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் வறுமையில் வாடும் ஆட்டோ டிரைவர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஆட்டோ டிரைவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

Update: 2020-04-24 22:45 GMT
திருச்செந்தூர், 

பழங்கால மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தபோது, மலையில் இருந்து உருண்ட பாறைகளை அடிப்படையாக கொண்டு சக்கரத்தை கண்டறிந்தனர். இதுவே மக்களை நாகரிக வாழ்வுக்கு அழைத்து சென்றது. அனைத்து எந்திரங்களும், வாகனங்களும் சக்கரத்தை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. 

மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ள ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு வாகனங்கள் துணை புரிகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையான வாகனங்கள் உருவாக்கப்பட்டன. காலமாற்றத்துக்கு ஏற்ப கை வண்டி, தள்ளுவண்டி, சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா என்று வாகனங்கள் பரிணமித்தன. ஓரிடத்தின் வழிகாட்டியாகவும், அடையாளமாகவும் வாகன ஓட்டுனர்கள் விளங்குகின்றனர்.

அனைத்து ஊர்களிலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட பிரதான இடங்களில் ஆட்டோ, கார், வேன் ஸ்டாண்டுகள் உள்ளன. மக்கள் விரும்பும் இடங்களுக்கு அவர்களை வாகனத்தில் அழைத்து சென்று வரும் உன்னதமான பணியில் டிரைவர்கள் ஈடுபட்டனர். பெரும்பாலான குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்றும் சேவையாற்றினர். இரவு-பகல் பாராமல், மக்களுக்காக உழைத்து தொண்டாற்றினர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கால் டிரைவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடுகின்றனர். தினந்தோறும் வாகனங்களை இயக்கினால்தான் வருமானம் என்ற நிலையில் இருந்த டிரைவர்கள், தற்போது பணமின்றி தவிக்கின்றனர். நாள் முழுவதும் வாகனங்களிலேயே பயணித்த டிரைவர்கள், நாட்கணக்கில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. ஆட்டோக்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

வருமானம் இழந்து தவிப்பு

இதுகுறித்து திருச்செந்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:-

திருச்செந்தூரில் சுமார் 500 பேர் ஆட்டோ ஓட்டி வருகிறோம். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வருமானம் இழந்து தவித்து வருகிறோம். ரேஷன் கடைகளில் அரசு வழங்கிய ரூ.1,000 நிவாரண உதவித்தொகை மற்றும் இலவச உணவுப்பொருட்களை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தில் பெரும்பாலான டிரைவர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யவில்லை. அதில் பதிவு செய்தவர்களில் சிலருக்கு மட்டுமே நிவாரணத்தொகையாக ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், குடும்பத்தை எப்படி நடத்துவது? என்றே தெரியவில்லை. யாரேனும் தன்னார்வலர்கள், அமைப்பினர் உதவி செய்வார்களா? என்று தினமும் எதிர்பார்த்து உள்ளோம்.

கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழித்து, ஊரடங்கு விலக்கப்படும்போதுதான் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வில் விடியல் பிறக்கும். ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னரும் ஆட்டோ டிரைவர்கள் முக கவசம் அணிந்து, சுகாதாரமான முறையில் பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்