ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 18 கடைகளுக்கு ‘சீல்’

ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 18 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2020-04-24 04:15 GMT
புதுக்கோட்டை,

ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 18 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். பின்னர் காய்கறி, மளிகை, மருந்துக்கடை போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 1 மணி வரை இயங்க அரசு அனுமதித்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி சில கடைகள் திறந்திருப்பதாக புதுக்கோட்டை வருவாய் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி புதுக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளை மூட பல முறை அறிவித்தும் அவர்கள் கடைகளை மூட வில்லை.

18 கடைகளுக்கு ‘சீல்’

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, மேலராஜவீதி, திலகர் திடல் உள்பட நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த இரும்புக்கடை, பேன்சி கடைகள், வாகன உதிரிபாக கடைகள், ஜெராக்ஸ் கடைகள் உள்ளிட்ட 18 கடைகளை பூட்டி ‘சீல்’வைத்தனர். இதுபோன்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடைகள் திறந்திருந்தால் கண்டிப்பாக மூடி ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்