தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் மேலும் 2,650 டன் அரிசி வந்தது
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மேலும் 2,650 டன் அரிசி வந்தது. 3 மாதங்களுக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க 14 ஆயிரம் டன் இருப்பில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு மேலும் 2,650 டன் அரிசி வந்தது. 3 மாதங்களுக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க 14 ஆயிரம் டன் இருப்பில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய உணவு கிடங்கு
நாகர்கோவில் பள்ளிவிளையில் மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய உணவு கிடங்கு அமைந்துள்ளது. இந்த உணவு கிடங்குக்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் இருந்து புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவற்றை ரெயில்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறது.
இங்கு பாதுகாப்பாக வைக்கப்படும் அரிசி தேவைக்கு ஏற்ப குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி வந்தது.
தெலுங்கானாவில் இருந்து...
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் செரளப்பள்ளியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு மேலும் 2,650 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் இந்த அரிசி நேற்று அதிகாலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு, நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டது.
14 ஆயிரம் டன் இருப்பு
இதுதொடர்பாக மத்திய உணவு கிடங்கு அதிகாரிகள் கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நேற்று 2,650 டன் அரிசி நாகர்கோவிலில் உள்ள மத்திய உணவு கிடங்குக்கு வந்துள்ளது. இங்கு மொத்தம் 14 ஆயிரம் டன் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி இருப்பில் உள்ளது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு 3 மாதத்துக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்க முடியும் என்றனர்.