பெண்ணுக்கு கொரோனா தொற்று எதிரொலி: அரகண்டநல்லூரில் யாருக்காவது சளி, காய்ச்சல் இருக்கிறதா? மருத்துவக்குழுவினர் ஆய்வு

அரகண்டநல்லூரில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், பொதுமக்களில் யாருக்காவது சளி, காய்ச்சல் இருக்கிறதா? என்று மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Update: 2020-04-23 23:00 GMT
திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நேற்று முன்தினமே அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. அத்துடன் நகரில் நேற்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடவேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அதிரடி உத்தரவு போட்டார். அதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. அதோடு ஊரடங்கு முடியும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக நகரில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் நகரில் பேரூராட்சி துறையினரும், சுகாதாரத்துறையினரும் செயல் அலுவலர் விழிச்செல்வன் மேற்பார்வையில் தினமும் 3 வேளை கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரகண்டநல்லூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்களிலும் 3 மருத்துவக்குழுக்கள் முகாமிட்டு வீடுதோறும் சென்று யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் இருக்கின்றதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில் அவசர தேவைக்கு ஏ.டி.எம். எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிகம் இன்றி வங்கிகள் செயல்பட்டன.

மேலும் அரகண்டநல்லூர் பேரூராட்சியை சுற்றியுள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து அரகண்டநல்லூருக்கு பொதுமக்கள் வந்து சென்றிருப்பதால் அந்த கிராமங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடாமல் தடுக்க ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சாம்ராஜ், ஜானகி ஆகியோர் மேற்பார்வையில் அரகண்டநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் துாய்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி ஊரான அரகண்டநல்லூரையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கடைசி ஊரான திருக்கோவிலூரையும் இணைக்கும் மாவட்ட எல்லையான தென்பெண்ணையாற்று பாலத்தின் கரையில் போலீசார் தடுப்பு அமைத்து ‘சீல்’ வைத்து உள்ளனர். ஆனால் மளிகை, காய்கறி, பால் ஏற்றி வந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அங்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை மற்றும் முக்கிய வீதிகளில் காலை, மாலை இரு நேரமும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குழாய் மூலம் வீடு, வீடாகவும் சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர கேரளா மற்றும் பெங்களூரில் இருந்து வடபொன்பரப்பிக்கு வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு முக கவசம், கையுறை அணிவது மற்றும் அடிக்கடி கை கழுவுவதன் அவசியம் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்