நெல்லை அருகே ஊரடங்கில் விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

நெல்லை அருகே ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியானார்கள்.

Update: 2020-04-24 00:05 GMT
அம்பை, 

நெல்லை அருகே ஊரடங்கு நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கார் மோதியது

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள குமாரசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவனின் மகன் மாதவன்துரை (வயது 35). அவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுடைய மகன் பாரத் ராஜா (5).

நேற்று மாதவன்துரை தனது மனைவி, மகனுடன் ஒரு மோட்டார்சைக்கிளில் முக்கூடலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு ஊருக்கு திரும்பினார். முக்கூடல் அருகே பாப்பாக்குடி மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து மாதவன்துரை, அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் பாரத்ராஜா ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் மாதவன்துரை, அவரது மகன் பாரத்ராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார். பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவரிடம் விசாரணை

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அம்பை அகஸ்தியர்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பதும், வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. நேற்று அகஸ்தியர்பட்டியில் இருந்து நெல்லையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக வந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான ராஜேஸ்வரி, கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கார் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்