மே 15-ந் தேதிக்குள் மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6½ லட்சமாக உயருமா? - மத்திய குழு கணித்ததாக அதிர்ச்சி தகவல்
மும்பையில் மே 15-ந் தேதிக்குள் கொரோனாவால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை 6½ லட்சமாக உயரும் என மத்திய குழு கணித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை,
நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த நகரமாக மராட்டிய மாநில தலைநகர் மும்பை விளங்குகிறது. நாட்டின் நிதி தலைநகராக திகழும் மும்பை இன்று கண்ணுக்கு தெரியாத கொடிய கொரோனாவால் தள்ளாடி வருகிறது. இங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து உள்ளது. இது நாட்டில் கொரோனா பாதிப்பில் சுமார் 5-ல் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய கூடுதல் செயலாளர் மனோஜ் ஜோஷி தலைமையிலான 5 பேர் குழு மும்பையில் ஆய்வு செய்து வருகின்றனர்.
6½ லட்சமாக உயருமா?
மத்திய குழுவினர் மும்பையில் கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிகை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் 42 ஆயிரத்தையும், அடுத்த மாதம்(மே) 15-ந் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயரும் என கணித்து இருப்பதாக தகவல்கள் பரவின. இது மும்பை நகர மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவலை மும்பை மாநகராட்சி மறுத்து உள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மும்பை மாநகராட்சி கடுமையாக செயல்படுத்தி வருகிறது. இது நோய் பரவலை தடுக்க உதவுகிறது. மத்திய குழு மும்பை மாநகராட்சி கமிஷனர், கூடுதல் கமிஷனர்கள் அல்லது மூத்த அதிகாரிகளுக்கு எந்த உத்தரவுகளையும் வழங்கவில்லை. மத்திய குழு மாநகராட்சியின் நடவடிக்கைகளை பாராட்டி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு திருப்தி அடைந்து உள்ளது.
மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரும் என்பதில் உண்மை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.