சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் 2,493 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, முக கவசம்: வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் 2 ஆயிரத்து 493 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, முககவசம் ஆகியவற்றை வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 11 அம்மா உணவகங்கள் மற்றும் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் நகராட்சிகளில் உள்ள 4 அம்மா உணவகங்கள் என மொத்தம் 15 அம்மா உணவகங்களில் காலை மற்றும் மதியம் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், அதற்கான செலவை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சேலம் மாநகராட்சியில் 2,112 பேரும், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 356 பேரும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 25 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 493 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின்போதும் இடைவிடாமல் பணியாற்றி வருவதால் அவர்களது சேவையை பாராட்டும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் வருகிற 3-ந் தேதி வரை தினமும் முக கவசம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று 2 ஆயிரத்து 493 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். இதில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2,112 பேருக்கும், அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 356 பேருக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 25 பேருக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 493 தூய்மை பணியாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஏ.பி.சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் பங்க் வெங்கடாசலம் உள்பட பகுதி செயலாளர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.