ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். குமாரபாளையத்தில் வாகனத்தில் வந்த மேலும் 21 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
குமாரபாளையம்,
பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற வடமாநில பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் தங்கியிருந்து வேலை செய்து பிழைத்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் உற்றார், உறவினர்களை பிரிந்து இருக்க முடியாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்தனர்.
கடந்த ஒரு மாதகாலமாக தொழில் செய்யும் பகுதியிலேயே முடங்கி கிடந்த வடமாநில தொழிலாளர்கள் சைக்கிள், சரக்கு ஆட்டோக்களை ஏற்பாடு செய்துகொண்டு குடும்பம், குடும்பமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குமாரபாளையம் தாசில்தார் தங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 11 பேர் பிடிபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சரக்கு ஆட்டோவில் குடும்பம், குடும்பமாக தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 21 பேரை போலீசார் பிடித்து தடுத்து நிறுத்தி பாதுகாப்பு கருதி குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்து உள்ளனர்.
இவர்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், இவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் வருவாய் துறையினர் தெரிவித்தனர்.