மத்திய அரசு சட்டத்துக்கு வரவேற்பு புதுவையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை - நாராயணசாமி உறுதி

டாக்டர்களை தாக்கியவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அந்த சட்டத்தை புதுவை மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2020-04-23 08:50 GMT
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,150 பேர் வீட்டு கண்காணிப்பில் இருந்து வந்தனர். தற்போது 2,800 ஆக குறைந்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி 100 நாள் வேலைத்திட்டம், விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதி அளித்து உள்ளோம். தனியார் தொழிற்சாலைகள் இயங்கிட கோரி 250 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 150 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்று செயல்பட்டால் தான் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் ‘ரேபிட் கிட்’ பரிசோதனை கருவி வந்துள்ளது. ஆனால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் மூலம் சோதனை மேற்கொள்ளப்படவில்லை. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனைக்கு அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சென்னையில் கூட ஒரு டாக்டர் இறந்த பின்பு அவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இழுக்கு ஏற்படுத்தி உள்ளனர். கொரோனா பணியில் டாக்டர் இறந்தால் அவரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர்களை தாக்கியவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அந்த சட்டத்தை புதுவை மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் பொதுமக்கள் தாராளமாக நிதி தந்து உள்ளனர். புதுவை மாநிலத்துக்கு நிறைய சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வந்து படம் பிடிக்கிறார்கள். எனவே புதுவைக்கு உதவ வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் உள்ளது. நடிகர் விஜய் ரூ.5 லட்சம் தருவதாக கூறி உள்ளார். அவருக்கு நன்றி. இதேபோல் மற்ற நடிகர்களும் உதவிட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்