ஊரடங்கால் கோவில் திருவிழாக்கள் ரத்து: பொம்மைகள், வளையல் வியாபாரிகள் கடும் பாதிப்பு
ஊரடங்கு காரணமாக திருவிழா காலங்களில் பொம்மைகள், வளையல்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கீரமங்கலம்,
ஊரடங்கு காரணமாக திருவிழா காலங்களில் பொம்மைகள், வளையல்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை என்று புலம்பி வருகின்றனர்.
திருவிழாக்கள் ரத்து
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாசிமகத் திருவிழாவில் தொடங்கி, வைகாசி மாதம் வரை மாவட்டம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு கோவிலிலும் சுமார் 10 நாட்கள் வரை திருவிழாக்கள் நடத்தப்படும். அப்போது இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மாசிமகத் திருவிழா முடிந்த நிலையில், கொரோனா கிருமி பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுக்க அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராம கோவில்களிலும் கூட திருவிழாக்கள் நடத்தப்படவில்லை.
முடங்கிய பொம்மை வியாபாரிகள்
ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும், கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்கள் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், வளையல் ஆகியவற்றை விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு திருவிழாக்களில் விற்பதற்காக வட்டிக்கு கடன் வாங்கி பொருட்கள் வாங்கி வைத்துள்ளனர். ஆனால், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால், கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், உணவுக்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொம்மை வியாபாரிகள் கூறும்போது, வீட்டுக்கு ஒருவர் அல்லது இருவர் என கீரமங்கலத்தில் மட்டும் சுமார் 150 பேர் பொம்மை, பாசி, மணி, வளையல்கள் விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு திருவிழாக்களை நம்பி ஒவ்வொருவரும் சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வட்டிக்கு கடன் வாங்கி பொருட்கள் வாங்கி வந்து வைத்திருக்கிறோம். ஆனால் திருவிழாக்கள் இல்லாததால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை.
உணவுக்கும் வழியில்லை. அதனால் மாவட்டம் முழுவதும் உள்ள எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என்றனர்.