ஊரடங்கில் பொழுதைபோக்க விளையாட்டு பொருட்களை தேடி அலையும் மக்கள் விலை கடுமையாக உயர்ந்தது
கரூரில், ஊரடங்கால் பொழுதைபோக்க விளையாட்டு பொருட்களை மக்கள் தேடி அலைவதால், அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
கரூர்,
கரூரில், ஊரடங்கால் பொழுதைபோக்க விளையாட்டு பொருட்களை மக்கள் தேடி அலைவதால், அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். கரூர் மாவட்டம் கொரோனாவின் பாதிப்பில், சிவப்பு மண்டலத்தில் உள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.
இதனால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் வீட்டுக்குள் முடங்கி விட்டனர். ஒரு சிலர் கள்ளச்சந்தையில் கிடைக்கும் சரக்கை அதிகவிலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். குடும்ப தலைவர்கள் குடும்பத்துடன் பொழுதை போக்கி வருகின்றனர்.
விலை உயர்வு
மரத்தில் ஊஞ்சல் கட்டி குழந்தைகளை ஆட்டிவிப்பது, குடும்பத்துடன் அமர்ந்து பல்லாங்குழி, செஸ், கேரம்போர்டு விளையாடுவது என பொழுதை போக்குகிறார்கள். இதற்கிடையே ஊரடங்கால் பாரம் பரிய விளையாட்டுகள் உயிர்ப்பித்துள்ளன. குறிப்பாக தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளை பெரியவர்களும், குழந்தைகளும் விளையாட தொடங்கி உள்ளனர். பரமபதம் பிரிண்ட் எடுக்க இணைய சேவை மையங்களை நாடுகின்றனர்.
இணைய சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் வீடுகளில் கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் வைத்திருப்பவர்களிடம் பிரிண்ட் வாங்கி செல்கிறார்கள். வெள்ளை பிரிண்டுக்கே ரூ.10, ரூ.20-க்கு வாங்குகிறார்கள். அதேபோன்று முன்பு ரூ.30-க்கு விற்கப்பட்ட தாயக்கட்டை தற்போது ரூ.60, ரூ.80 என விற்கப்படுகிறது. கேரம்போர்டு எங்காவது கிடைக்குமா? என தேடி அலைகிறார்கள். ரூ.500 விலை மதிப்புள்ள கேரம்போர்டு ரூ.1,000, ரூ.1,500 கொடுத்து வாங்குகிறார்கள். எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்லை.
வீட்டுக்குள் சும்மா உட்கார்ந்து குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க இதுபோன்று விளையாடுவது ஆரோக்கியமானது என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.